சென்னை, அசோக்நகர், 7வது தெருவைச் சேர்ந்த சிவரஞ்சனி, பெ/வ.29, க/பெ. அருண் தினேஷ் என்பவர், அசோக் நகர் 3வது அவென்யூவில் தள்ளுவண்டியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார். சிவரஞ்சனி கடந்த 06.02.2023 அன்று இரவு மேற்படி தள்ளுவண்டி கடையிலிருந்த போது, அங்கு வந்த பாபு (எ) டைமன்ட் பாபு என்பவர் சிவரஞ்சினியிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். உடனே சிவரஞ்சனி இங்கு தகராறு செய்யாதீர்கள், இங்கிருந்து செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். ஆனால் பாபு சிவரஞ்சினியை கையால் தாக்கி, கீழே தள்ளி கடையில் இருந்த கொதிக்கும் எண்ணையை சிவரஞ்சனி மீது ஊற்ற முயன்ற போது, சிவரஞ்சனி சத்தம் போடவே, அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க வந்ததால், பாபு ஓடிவிட்டார். இது குறித்து சிவரஞ்சினி R-3 அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-3 அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர வி சாரணைசெய்து, தப்பியோடிய பாபு (எ) டைமன்ட்பாபு, வ/36, த/பெ.துரைசாமி, 6வது தெரு, அசோக்நகர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், எதிரி டைமன்ட் பாபு என்பவருக்கும் சிவரஞ்சினியின் மைத்துனருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக டைமண்ட் பாபு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்ததால், ஆத்திரத்தில் டைமன்ட்பாபு மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட எதிரி பாபு (எ) டைமன்ட் பாபு விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப் படி சிறையில் அடைக்கப்பட்டார்.