அங்ககச்சான்று பண்ணைகளில் விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு…

விருதுநகர் – அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு மேற்கொண்டார். பண்ணைகளில் பயிரிடப்பட்ட கொய்யா, பப்பாளி, சப்போட்டா, மாமரம்,நெல்லி மற்றும் காய்கறி  பயிர்கள் நாற்றங்கால் ஆய்வு செய்யப்பட்டது. அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளில் முழுமையாக அங்கக வேளாண்மை முறைப்படி சாகுபடி செய்யப்படுகிறதா எனவும் தமிழ்நாடு அங்கக வேளாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும் இயற்கை வேளாண்மை முறையில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்பங்களையும் ஆய்வு  செய்தனர்.

இந்த ஆய்வினால் அங்ககப் பண்ணைகளின் தரம் உறுதி செய்யப்படுவதைத் தொடர்ந்து நுகர்வோர்களுக்கு உண்மையான  அங்கக முறைப்படி உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்படும். ஆய்வின்போது, விருதுநகர் அங்ககச்சான்று ஆய்வாளர் இரத்தினகுமார், தோட்டக்கலை அலுவலர்கள் ஜெகதீஸ், ஆயிஷா உடனிருந்தனர்.
மேலும், அங்கக முறையில் சாகுபடி மேற்கொள்ளும்  விவசாயிகள் தங்கள் பண்ணைகளை பதிவு செய்ய விண்ணப்ப படிவங்களை https://wwwtnocd.net/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அங்ககச் சான்றளிப்புக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பப் படிவம் மூன்று நகல்கள், பண்ணையின்  பொது விவரக்குறிப்பு, வரைபடம், மண் மற்றும் நீர்ப்பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்த்திட்டம், துறையுடனான  ஒப்பந்தம் மூன்று நகல்கள், நில ஆவணம், பான் கார்டு நகல், ஆதார் நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி  விருதுநகர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்கலாம்.

அங்ககச் சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்கத் தேவையான விபரங்கள் மேலும் பெறுவதற்கு விருதுநகர் விதைச்சான்றளிப்பு மற்றும் அங்ககச்சான்றளிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என  உதவி இயக்குநர் சுப்பாராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »