சென்னை, விருகம்பாக்கம், சின்மயாநகர், வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த சாந்தி, வ/48 என்பவரின் கணவர் இறந்த நிலையில், சாந்தி, போரூர் கங்காநகரைச் சேர்ந்த பார்த்திபன், வ/59 என்பவருடன் கடந்த 10 வருடங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சாந்தி தனது மகளுடன் சேர்ந்து வாழ்வதாகவும், இனி உன்னோடு வாழமாட்டேன் எனவும், இவ்வளவு நாள் வாழ்ந்ததற்கு பணம் வேண்டும் என பார்த்திபனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக தகராறு நடைபெற்று வந்த நிலையில், இருவரும், அன்று இரவு, விருகம்பாக்கம், ஸ்கூல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சமரசம் பேச அழைத்து, சாந்தி, அவரது மகள் வெண்மதி, பெ/வ.28 என்பவருடன் வந்திருந்தார். அப்பொழுது அங்கு வந்த பார்த்திபனுக்கும், சாந்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, பார்த்திபன் ஆத்திரத்தில் அருகில் இருந்த கத்தியால் சாந்தியின் கழுத்தில் குத்தினார். மேலும் இதனை தடுக்க வந்த சாந்தியின் மகள் வெண்மதியையும் கத்தியால் தாக்கிவிட்டு பார்த்திபன் தப்பிச் சென்றார்.
இரத்தக் காயமடைந்த இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேற்படி சம்பவம் குறித்து வெண்மதி கொடுத்த புகாரின் பேரில், R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, எதிரி பார்த்திபன், வ/59, த/பெ.வேணுகோபால், எண்.4, சரஸ்வதிதெரு, கங்காநகர், போரூர், சென்னை என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் எதிரி பார்த்திபனை, அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.அதன் பேரில், மேற்படி வழக்கில், கொலை முயற்சி பிரிவிலிருந்து கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.