சக்திவேல், வ/32 என்பவர், சென்னை, ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார். இரவு, மேற்படி டாஸ்மாக்பாருக்கு அவ்வப்போது வந்து செல்லும் நபர் ஒருவர் சக்திவேலிடம் பணம் குறைவாக கொடுத்து மது பாட்டில் வாங்கி வர கூறியுள்ளார். சக்திவேல், எப்பொழுதும் குறைவான பணம் கொடுத்து மதுபாட்டில் கேட்கிறாய், வாங்கி வர முடியாது என மறுத்துள்ளார். பின்னர் அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி சென்று விட்ட நிலையில், இரவு சுமார் 10.40 மணியளவில், அந்த நபர் இருசக்கர வாகனத்தில் மேற்படி டாஸ்மாக் கடைக்கு வந்து, தான் 1 லிட்டர் பாட்டிலில் வாங்கி வந்த பெட்ரோலில் இருந்து, 180 மி.லி. அளவு கொண்ட காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி கொளுத்தி, டாஸ்மாக்கடை முன்பு வீசிவிட்டு சென்றார். இதில் யாருக்கும், எந்த பொருளுக்கும் சேதமில்லை. இச்சம்பவம் குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-9 வளசரவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அப்பு (எ) கதிரவன், வ/32, த/பெ.கர்ணன், சின்ன போரூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி அப்பு (எ) கதிரவன் மீது R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு அடிதடி வழக்கு உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி அப்பு (எ) கதிரவன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்