வடபழனி பகுதியில் கடத்திச் சென்றதாக நாடகமாடிய மகனை காவல்துறையினர் மீட்பு..

சென்னை, திருவல்லிக்கேணி, ராம்நகர் 4வது தெருவில் வசித்து வரும் பென்சிலய்யா, வ/54 என்பவர் 13.01.2022 அன்று காலை அவரது மகன் கிருஷ்ணபிரசாத், வ/24 என்பவர் வடபழனியில் உள்ள பிரபல வணிகவளாகத்திற்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணவில்லை என்றும் R-8 வடபழனி காவல் நிலையத்தில் 14.01.2022 அன்று புகார் கொடுத்ததின் பேரில், ஆண் காணவில்லை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

R-8 வடபழனி காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், பென்சிலய்யா மேற்படி முகவரியில் அவரது மனைவி, ஜெயலஷ்மி, மூத்தமகன் ஆகாஷ் மற்றும் கிருஷ்ணபிரசாத் ஆகியோருடன் வசித்து வருவது தெரிய வந்தது. இந்நிலையில், பென்சிலய்யாவின் செல்போன் வாட்சப் எண்ணிற்கு அவரது மகன் கிருஷ்ணபிரசாத் செல்போன் வாட்சப் எண்ணிலிருந்து உங்களது மகனை கடத்தி வைத்துள்ளோம், ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும் தகவல் அனுப்பப்பட்டது.

உடனே, காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான காவல் குழுவினர், சைபர் கிரைம் உதவியுடன் கிருஷ்ண பிரசாத்தின் செல்போன் எண்ணின் அழைப்புகளின் விவரங்கள் மற்றும் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தபோது, கிருஷ்ணபிரசாத், தெலுங்கானா மாநிலம், செகந்திரபாத்தில் இருப்பது தெரிய வந்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் செகந்திரபாத் சென்று, அங்கு தெலுங்கானா காவல் அதிகாரிகள் உதவியுடன், பெட்ஷீராபாத் காவல்நிலைய காவல் குழுவினருடன் செகந்திரபாத்தில் மறைந்திருந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், கிருஷ்ணபிரசாத்திற்கு சரியான வேலை இல்லாததாலும், குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதாலும், தந்தையிடம் இருந்து பணம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கிருஷ்ணபிரசாத் தன்னை யாரோ கடத்திச் சென்றதாகவும், பணம் கேட்டு கடத்தல் நாடகம் அரங்கேற்றியதும் தெரியவந்தது. அதன் பேரில், காவல் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில், கடத்தல் நாடகமாடிய கிருஷ்ணபிரசாத்தை காவல் குழுவினர் கண்டித்தும், இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தும், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »