மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்….

ஆண்டிபட்டி – வருஷநாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 8630 பொது மக்களுக்கு இடையூறாகவும் குறுகலான சாலையில் வைகை ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது. அருகில் 50 மீட்டர் தொலைவில் காளியம்மன் விநாயகர் கோவில், ஐயப்பன் மணிமண்டபம், அரசு ஆரம்ப தொடக்க பள்ளி மற்றும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கடையை மாற்ற பெண்கள் கூட்டமைப்பினர் பஸ் மறியலும் செய்தனர். அருகே உள்ள வைகை ஆற்றில் உயிர் பலியும் ஏற்பட்டது. மேலும் குறுகலான வளைவில் சாலையில் மது அருந்தி மற்றும் வாங்கி வருபவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்கதையாக உள்ளது.

கடையை மாற்ற கோரி 2005 தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தனிநபர் ஒருவர் பொது வழக்காக கருதி 2015ஆம் ஆண்டு முதல் இன்றுவரை வழக்கும் தொடர்ந்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கான விளக்கமும், பதில்களும் பொது தகவல் அலுவலர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மூலம் அனுப்பப்படுகிறது. அதனடிப்படையில் தேனி தும்மக்குண்டு சாலையில் வருசநாடு ஊராட்சி எல்லைக்குட்பட்ட ஒதுக்குப்புறமான பொது மக்கள் குடியிருப்பு இல்லாத பகுதி மற்றும் பள்ளி கோவில்கள் இல்லாத இடங்களை தேர்வு செய்து புதிய டாஸ்மாக் கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியும் செயல்படாமல் உள்ளது.

இந்த புதிய டாஸ்மாக் கட்டிடத்தை கலால்துறை சர்வேயர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் கட்டிட விதிமுறைகள் அனைத்தும் சரியாக இருப்பதற்கான அதிகாரிகள் ஆய்வு  செய்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மாற்றம் செய்யாமல் ஒருசிலரின் சூழ்ச்சியால் இந்த மதுபான கடையை மாற்ற முடியவில்லை. இது சம்பந்தமாக அனைத்து செய்திகளிலும் போராட்டங்களும் எழுந்த நிலையில் 2019ஆம் ஆண்டு அன்றைய தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்  டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்டும் இன்றுவரை அதே இடத்தில் தொடர்ந்து செயல்படுவதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறந்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த கடையை புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்து எவ்வித இடையூறுமின்றி குடிமகன்கள் வந்து செல்ல தற்போதைய மாவட்ட ஆட்சியரும் டாஸ்மாக் நிர்வாகம் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அருகே உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு பெண்கள் வந்து செல்ல அச்சப்படுகின்றனர். மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குடிமகன்கள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க இந்த கடையை நேரடியாக மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனவும் இப்பகுதி பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றனர். மேலும் தவறும் பட்சத்தில் பெண்கள் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக கூறுகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இப்பகுதி பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »