மதுரையில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான திருடுபோன 111 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்..

மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலைங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பதிவான செல்போன் திருட்டு வழக்குகள் மற்றும் தொலைந்த போன மொபைல் போன் சம்பந்தமான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சைபர்  கிரைம் மற்றும் மாவட்ட காவல்துறையின் துரிதமான நடவடிக்கையால் திருட்டு மற்றும்தொலைந்து போன 15 லட்சத்து 80ஆயிரத்து 598ரூபாய் மதிப்புடைய 111செல்போன்கள் மீட்கப்பட்டு, அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் வழங்கினார்.

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இதுவரை 64 லட்சத்து 13 ஆயிரத்து 853 ரூபாய் மதிப்பிலான 511 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் திருடுபோனாலோ அல்லது தொலைந்தாலே காவல்நிலையங்களில் புகார் அளிக்க தயங்காமல், தாமதப்படுத்தாமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் துரித நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், செல்போன் வைத்திருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்தார்.

மேலும் வங்கிகளிலிருந்து பேசுவதாக கூறி நூதனமுறையில் பணத்தை இழந்த வழக்குகளில் கடந்த மூன்று மாதங்களில் 23லட்சத்து 97ஆயிரத்து 636 ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களின் வங்கிகணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் செல்போன் கிடைக்கப்பெற்ற பொதுமக்கள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நின்று சல்யூட் அடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »