பள்ளிக் கல்வித்துறை சார்பில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

மதுரை- மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு வழங்கி தெரிவிக்கையில் – பள்ளிக் கல்வித்துறை சார்பில், சிறந்த ஆசிரியர்களைப் போற்றும் வகையில் ஆசிரியர் தினத்தன்று டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நாயகர்களான விருது பெற்ற 13 ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மாணவனாக இருக்கும் போது நடைபெற்ற பல ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஞாபகம் வருகிறது. இன்று நான் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர் பெருமக்களுக்கு விருது வழங்குகின்ற நிலைக்கு என்னை உயர்த்தியவர்கள் எனது பள்ளிப் பருவ ஆசிரியர் பெருமக்கள்தான். பள்ளி ஆசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளிப் படிப்பை சராசரி மாணவனாக பல சவால்களை எதிர்கொண்டே நிறைவு செய்தேன். என்னுடைய ஆசிரியர்கள் எனக்கு அளித்த உற்சாகம் மற்றும் உத்வேகத்தின் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறேன். எனக்கு வழிகாட்டியாக விளங்கிய அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படைப்பாற்றலில் மிகச் சிறந்தவர்களாக ஆசிரியர் பெருமக்கள் இருந்தால் மட்டுமே  தினம் தினம் பல புதிய மாற்றங்களை கொண்டு வரும் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்க முடியும். தங்களது மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் அதே வேளையில் உண்மை. நேர்மை மற்றும் உழைப்பு ஆகிய உயர்ந்த பண்புகளையும் உருவாக்கும் வகையில்  அனைத்து ஆசிரியர் பெருமக்களும் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக விளங்குவார்கள் எனத் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற விழாவில் க.கர்ணன், மு.சுப்பிரமணியன், இரா.சே.முரளிதரன், வே.ம.விநாயகமூர்த்தி, த.சரவணன், சா.அருள்ராஜ், கோ.சிவக்குமார், ம.முருகேஸ்வரி, சு.லதா, சி.மகேஸ்வரி, மு.பரமேஸ்வரி,  பி.ஜெயந்தி,  க.மதிவதனன் ஆகிய ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்கள்.

க.கர்ணன், மு.சுப்பிரமணியன், இரா.சே.முரளிதரன், த.சரவணன், ம.முருகேஸ்வரி, சு.லதா, சி.மகேஸ்வரி, மு.பரமேஸ்வரி,  பி.ஜெயந்தி ஆகியோர் அரசு வழங்கிய சன்மானத் தொகை தலா ரூ.10,000-த்தை சேர்த்து ரூ.90,000-த்தை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முதலமைச்சரின் கொரோன தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.சா.அருள்ராஜ் அரசு வழங்கிய சன்மானத் தொகை ரூ.10,000-த்தை கீழடி அகழ்வாராய்ச்சி பணிக்காக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகலா , ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »