பட்டிணப்பாக்கம் பகுதியில் தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்..

பட்டிணப்பாக்கம் பகுதியில் தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டிட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உட்பட 46 நபர்கள் கைது.

இன்று காலை சுமார் 08.00 மணியளவில், சென்னை, டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பூம்பொழில் வளாகத்தில் உள்ள தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் மற்றும் ராமநாதன், திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் சுமார் 150 க்கம் மேற்பட்ட நபர்கள் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் வீட்டினை முற்றுகையிட வேண்டும் என்று வளாகத்தின் உள்ளே நுழைய முற்பட்டனர். அப்போது, காவல்குழுவினர் இப்பகுதி, உயர்நீதி மன்றத்தின் தலைமைநீதிபதிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் வசிக்கும் பகுதி என்றும், இங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் நுழையகூடாது என்றும், கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஒன்று கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மீறி செயல்படுவது சட்டப்படி குற்றம் என்றும் எச்சரித்தனர்.

ஆனால் காவல் துறையினரின் அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கையை மீறி மேற்படி நபர்கள் காவல் துறையினரை தள்ளிவிட்டு, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததுடன், அனுமதியின்றி ஒன்றுகூடி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதும், பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்யும் வகையிலும் செயல்பட்டதால், மேற்படி செயல்களில் ஈடுபட்ட தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பரசன் உட்பட 46 நபர்களை கைது செய்து, E-5 பட்டிணப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 46 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »