சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ.சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று இரவு தேனாம்பேட்டை, எல் டாம்ஸ் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ATM மையத்தில் பணம் செலுத்த சென்ற போது, அங்கு 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 4 நபர்கள் மேற்படி மைதீன் ராவுத்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் அடங்கிய பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து மைதீன் ராவுத்தர் E-3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ஜான்ஜெய்சிங், வ/43, த/பெ.தேவதாஸ், எண்.16, சிமெண்ட் ரோடு, பெத்தானியா கார்டன், பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை 28,01,2023 அன்று கைது செய்து, அவரிடமிருந்து ரூ.4,300/- மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 2. ரமேஷ், வ/29, த/பெ. ஆறுமுகசாமி, நாவலர் நகர் குடியிருப்பு, பவர் ஆபிஸ், தண்டையார் பேட்டை என்பவரை கைதுசெய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
மேலும், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய கு ற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய 3.சங்கர், வ/36, த/பெ.ரவி, பெரியார் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, திருவான்மியூர், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.30,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் எதிரி சங்கர் J-6 திருவான்மியூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 16 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சங்கர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மேற்படி வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரியை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.