திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா..

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி
கலையரங்கில் நடைபெற்றது. திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித்  தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக மாநிலத் தலைவருமான டாக்டர் மு.ராஜேந்திரன், ஐஏஎஸ் தலைமையின் கீழ் செயல்படும் திருவண்ணாமலை மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இவ்விழாவிற்கு, திருவண்ணாமலை மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர்
கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் பெ.பெரியசாமி
வரவேற்புரையாற்றினார். வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியின் தாளாளர்
பா.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். இந்த மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வந்தவாசி, ஆரணி, பெரணமல்லூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து சிலம்பாட்ட வீரர்கள் ஏராளமாய் பங்கேற்றனர். போட்டியின் நடுவர்களாக ஈரோடு மாவட்ட சிலம்பாட்டக் கழகத்தின் தேசிய நடுவர்  ஆறுமுகம் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் மின்னிலா, இராணி, சேட்டு, காளிதாஸ் ஆகியோர் இருந்தனர்.

சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவில் சேத்துப்பட்டு புத்தாஸ் சிலம்பக் குழுவின் சேதுராமன்,
பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை சிலம்பக் குழுவின் தர்ஷினி ஆகியோர் முதலிடத்தையும், ஆண்களுக்கான சீனியர் பிரிவில் பெரணமல்லூரைச் சேர்ந்த இளவரசன் முதலிடத்தையும், பெண்களுக்கான சீனியர் பிரிவில் வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவி ஆர்.லெட்சுமி ஆகியோர் முதலிடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வென்றவர்களுக்கு  மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் கா.விஸ்வேஸ்வரய்யா,  பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
எந்த பணியில் சேர வேண்டுமானாலும் நல்ல ஆரோக்கியமும், உறுதியான உடலும்
நமக்கு அவசியம் இருக்க வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்வதன் மூலமாக, நம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு, நமக்குள் ஒரு தன்னம்பிக்கையும் பிறக்கும். இளவயதிலேயே சிலம்பம் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்வது, பிற்காலத்தில் நம் வாழ்க்கைக்கு கைகொடுக்கும். சிலம்பாட்ட வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு
வழங்கியிருக்கிறது.

இது இன்னும் சிலம்பாட்டக் கலைக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.     எந்தப் போட்டிகளில் நீங்களும் பங்கேற்றாலும், தோல்வி ஏற்பட்டால் தயங்கி நின்றுவிடக் கூடாது. ஒரு போட்டியில் பங்கேற்பது என்பதே நமக்கு புதிய அனுபவம்தான். எதிலும் தன்னம்பிக்கையோடும், உறுதியோடும் பங்கேற்றால் நம்மால் வெற்றிபெற முடியும்” என்று கூறினார்.     இந்த விழாவில், ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நிர்வாக இயக்குநர் சி.வி.ரங்கநாதன், வந்தவாசி ஆண்கள் மேனிலைப்பள்ளி உடர்கல்வி ஆசிரியர் முத்தமிழன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயலாளர் பா.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற சிலம்பாட்ட வீரர்கள், வரும் டிசம்பர் – 18,19 ஆகிய தேதிகளில் சிவகங்கையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »