தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை – உலக புராதன சின்னமான கடற்கரை கோயிலை கண்டுகளித்தனர்…

காஞ்சீபுரம் – தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அவர் உலக புராதன சின்னமான கடற்கரை கோயிலை கண்டுகளித்து ரசித்தனர். நாகாலாந்து கவர்னராக பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக மாற்றப்பட்டார். அவர் நேற்று சென்னையில் தமிழக கவர்னராக பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்ற முதல் நாளான நேற்று தன் பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தந்த தன் குடும்பத்தினர், உறவினர்களுடன்  மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடற்கரை கோயிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றி குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் வழங்கப்பட்டது. பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோயிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார். கடற்கரை கோயிலின் இரு கருவரைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். பிறகு அங்கு முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர் பார்வையிட்டார். பிறகு கடற்கரை கோயில் வளாகத்தில் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் கடற்கரை கோயில் உருவாக்கப்பட்டத்தின் பின்னணி, கடல் ஓரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோயில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார்கள். கவர்னர் ரவி கடற்கரை கோயிலின் அரிய தகவல்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். இறுதியில் கடற்கரை கோயிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் குடும்பத்துடன் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். கவர்னர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோயில் சாலை பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கடற்கரை கோயிலுக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் கடற்கரை கோயிலை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு 1 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. கவர்னருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் ராஜாராமன் திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் அலுவலர் ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »