சென்னை, கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகர் 4வது தெருவில் வசிக்கும் அருண்குமார், வ/32, த/பெ.முருகேசன் என்பவர், தண்டையார்பேட்டை நேதாஜிநகர், 6வது தெருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் மாலை சுமார் 05.00 மணியளவில், நேதாஜிநகர் 6வது தெருவில் காருடன் நின்று கொண்டிருந்த போது, அவருக்கு தெரிந்த நபரான கண்ணன் என்பவர் அருண்குமாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அருண்குமார் பணம் தர மறுக்கவே, கண்ணன் தகராறு செய்து, அருண்குமார் ஓட்டி வந்த காரின் முன் பக்ககண்ணாடியை உடைத்து, அருண்குமாரை கை மற்றும் பிளாடால் தாக்கி இரத்தக்காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார்.
காயமடைந்த அருண்குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததின் பேரில், சிகிச்சை பெற்று வரும் அருண்குமார் மேற்படி சம்பவம் குறித்து கொடுத்த புகாரின் பேரில், H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் அருண்குமாரிடம் மற்றும் சம்பவ இடத்தில் தீவிரவிசாரணை செய்து, மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கண்ணன், வ/37, த/பெ.சங்கர், நேதாஜிநகர் 4வது தெரு, தண்டையார்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அருண்குமார் வேலை செய்து வரும் நிறுவனத்தில் எதிரி கண்ணன் ஏற்கனவே வேலை செய்து 2 மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியது தெரிய வந்தது.
விசாரணைக்குப் பின்னர் எதிரி கண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.